டெல்லி கட்டட விபத்தில் மீட்புப் பணிகள் Reuters
இந்தியா

“உயிர் போனாலும் பொறுப்பல்ல”.. டெல்லி கட்டட விபத்துக்கு முன்பே மாணவர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து!!

முன்பு இந்திய விமானப் படையில் சேவைத் துறையில் பணியாற்றிய கட்டடத்தின் உரிமையாளர், லாப நோக்கங்களுக்காக தங்கும் விடுதியை பயன்படுத்தியது பலரையும் கவலையடைய வைத்திருக்கிறது. விவரம் என்ன?... விரிவாக பார்க்கலாம்.

ஹாஜிராபானு அ

டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் கட்டடம் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முன்பு இந்திய விமானப் படையில் சேவைத் துறையில் பணியாற்றிய கட்டடத்தின் உரிமையாளர், லாப நோக்கங்களுக்காக இந்த தங்கும் விடுதியை பயன்படுத்தியது பலரையும் கவலையடைய வைத்திருக்கிறது.

டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்து தரைமட்டமானது. விபத்து பகல் நேரத்தில் நடந்தது என பலர் ஆசுவாசப்பட்டுக் கொண்டாலும், 7 மாணவர்களின் உயிர்கள் பறிபோயின. ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகும் ஆசையில் தங்கிப்படித்தவர்களின் கனவுகளும் தரைமட்டமாகியுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

டெல்லி கட்டட விபத்தின் மீட்புப் பணிகள்

அறைகளுக்குள் வெயில் புகாத அளவுக்கு நெருக்கமாக, பாதுகாப்பு நெறிகளை துளியும் கவனத்தில் கொள்ளாமல் கட்டப்பட்ட இந்த கட்டடம் மாணவர்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது. 1990-களின் பிற்காலத்தில் எழுப்பப்பட்ட கட்டடத்துக்கு ஒரு மாடி வரையில் மட்டுமே கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும், பிற்காலங்களில் விதிகளை மீறி 5 மாடி வரை கட்டடம் எழுப்பப்பட்டதாகவும் வெளியான தகவல்கள் ஏற்கெனவே அதிர்ச்சியை மக்கள் மத்தியில் விதைத்திருந்தது.

இந்நிலையில்தான், கட்டட உரிமையாளர் குறித்த மேலும் பல விவரங்கள் கேட்போரின் சிந்தனையை ஒரு நிமிடம் உறைய வைக்கிறது. 81 வயதாகும் கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா, இந்திய விமானப் படை சேவை செய்தவர். ஹார்ட்வேர் மற்றும் பெயிண்டிங் ஷாப் வைத்திருக்கும் தொழிலதிபராக இன்று வலம்வரும் குப்தா, விமானப் படை சார்ஜெண்டாக இருந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஹரிராம் குப்தாவின் மனைவி உர்மிளா, அவரது மகன் மகேஷ் குப்தா ஆகியோரையும் டெல்லி காவல் துறை கைது செய்திருக்கிறது.

லாப நோக்கத்துக்காக கட்டடத்தை பயன்படுத்த நினைத்த குப்தா குடும்பம், மாணவர்களை தங்க வைக்கும் முன்பு அவர்களிடம் அக்ரீமெண்ட் ஒன்றை போட்டு கையெழுத்து பெற்றிருக்கிறார்கள். அதில் ‘எனக்கு ஏற்படும் உயிரிழப்புக்கோ அல்லது ஆபத்துக்கோ விடுதி நிர்வாகம் பொறுப்பல்ல’ என்ற வரிகள் முக்கியமாக இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மாணவர்களிடம் இப்படியான கையெழுத்தைப் பெற நிர்பந்தித்தவர்கள் யார் என்பதே காவல் துறையின் இப்போதைய தேடுதலாக இருக்கிறது.

தலைநகரின் முக்கிய பகுதியில் நடந்த இந்த விபத்திற்கு தனியார் நிர்வாகம் மட்டுமே பொறுப்பல்ல என்பதை அறிந்த அதிகாரிகள், டெல்லி மாநகராட்சியைச் சேர்ந்த ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். சம்பவத்திற்குப் பின்னான எந்த நடவடிக்கையும் இழந்த மாணவர்களின் உயிருக்கு ஈடாகாது என்பதால், கூடுதல் கவனமும், முறையான கட்டுப்பாடுகளுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.