பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய கார் திருடன் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில், குணால் என்பவர் கார்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளார். அவர் மீது 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது முகத்தை மாற்றி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இருந்தும் காவல்துறையினர், அவரை தெற்கு டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை இணை ஆணையர் ரோமில் பானியா கூறுகையில், டெல்லியை சேர்ந்த குணால் தெற்கு டெல்லியின் நேரு பேலஸ் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 62 வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. அவருடைய வேலையே வாகனங்களை திருடி விற்று, அந்த பணத்தை தனது காதலியுடன் உல்லாசமாக செலவு செய்வதுதான். குணாலை விசாரித்ததில் அவருடைய கூட்டாளிகள் இர்ஷாத் அலி மற்றும் முகமது ஷாஹேப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த திருட்டுப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, குணால் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது முகத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அவர் கைது செய்யப்பட்டபோது 12 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.