தலைநகர் டெல்லியில் ஆட்சியமைப்பதை அனைத்துக் கட்சிகளும் பெருமையாகவே கருதுகின்றன. அந்தவகையில், காங்கிரஸுக்குப் பிறகு தற்போதுவரை ஆம் ஆத்மி கட்சி அரியணையில் இருந்து வருகிறது. இந்தப் பதவிக்காலம் அடுத்த மாதம் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராகிவருகிறது. தேர்தல் ஆணையத் தகவல்படி, டெல்லியில் மொத்த வாக்காளர்கள் 1.55 கோடி பேராக உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 83.5 லட்சம் பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 73.7 லட்சமாக உள்ளது. இதையடுத்து, அதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் 13,033 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இது ஒருபுறமிருக்க மறுபுறம், 2024 மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்திருந்தன. ஆனால் அதேநேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவ்விரு கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன. டெல்லியிலும் இதே பிரச்னை நீள்வதால், இங்கேயும் இந்த இருகட்சிகள் தனித்தனியாய்ப் போட்டியிட உள்ளன. இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன. அதன்படி, புதுடெல்லி தொகுதியில் முன்னாள் பாஜக எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் மற்றும் மறைந்த முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் காங்கிரஸ் முன்னாள் எம்பி சந்தீப் தீட்சித் ஆகியோரை அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்கொள்ள உள்ளார். கல்காஜி தொகுதியில் காங்கிரஸின் அல்கா லம்பா மற்றும் தெற்கு டெல்லி முன்னாள் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி ஆகியோருக்கு எதிராக முதல்வர் அதிஷி போட்டியிடுகிறார்.