டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை காரணம் காட்டி, கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கட்டுமான தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசை குறைக்கும் பொருட்டு கட்டுமான பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்று ஏற்பாடுகள் எதையும் செய்யாமல் திடீரென இப்படியான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது தொழிலாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதற்கென்று உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசுகள் உருவாக்காததை கவனத்தில் கொண்டு, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" எனவும் மனுவில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
"கட்டுமானங்களை இடிப்பது மற்றும் பள்ளம் தோண்டுவது போன்றவைகளால் தான் அதிகளவில் மாசு ஏற்படும். எனவே, அவற்றுக்கு மட்டும் தடை விதிக்காமல் ஒட்டு மொத்த கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்திருப்பதை மாற்றி அமைக்க வேண்டும். காற்று மாசுபாட்டை காரணம்காட்டி அரசுகள் இத்தகைய தடை உத்தரவை பிறப்பித்து இருப்பது லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் இருக்கிறது.
வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே அரசுகள் உரிய விளம்பரங்களை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, கட்டுமானங்களுக்கான தடைவிதிக்கும் போது மட்டும் உடனடியாக அமல்படுத்துவது ஏன்?” எனவும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.