இந்தியா

`காற்றின் தரம் சரியாகவில்லை’- ஊழியர்களை WFH எடுக்க அறிவுறுத்தும் டெல்லி அமைச்சர்!

webteam

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகமானதை அடுத்து காற்றின் தரம் மிகமோசம் என்ற பிரிவிலேயே நீடிக்கிறது. இதனால் வாகன மாசுபாட்டை குறைப்பதற்காக, முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் காற்றின் தரம் என்பது தொடர்ந்து மிக மோசம் என்ற பிரிவிலேயே கடந்த சில தினங்களாக நீடித்து வருகிறது. காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் அண்டை மாநிலங்களான அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து தடையை மீறி பயிர்க்கழிவுகளை எரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “தலைநகர் டெல்லியில் 50 சதவீத மாசு, வாகனங்களால்தான் ஏற்படுகிறது. வாகன மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவும். அதே நேரத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறேன். பஞ்சாப் அரசுக்கு ஆதரவளிக்காத மத்திய அரசால் பஞ்சாபில் தொடர்ச்சியாக பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுகிறது. விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமா என பாரதிய ஜனதா அரசு கேட்கிறது. விவசாயிகளை பழிவாங்க வேண்டாம். பயிர் கழிவுகள் எரிப்பதை தடுக்க உதவுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.



இந்நிலையில் ஏற்கனவே காற்று மாசுபாடு காரணமாக டெல்லி முழுவதும் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார்.