இந்தியா

ப.சிதம்பரம் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள் 

ப.சிதம்பரம் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள் 

rajakannan

டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்திற்குள் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய ப.சிதம்பரம், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் நான் குற்றம்சாட்டப்படவில்லை. வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் என் பெயர் கூட இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன. ஜனநாயகம், சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். சுதந்திரத்தை பெறவும் போராடினோம். சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம். பொய்யர்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 7 மாதங்களுக்கு பின் எனது முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது” என்றார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால், பேட்டியை முடித்துவிட்டு ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றார். அதனையடுத்து, ப.சிதம்பரம்  காரை பின் தொடர்ந்து அவர்கள் சென்றனர்.

ப.சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சுவர் ஏறி  குதித்து உள்ளே சென்றனர். ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சம்மன் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.