இந்தியா

உத்தராகண்ட்: புதிய முதல்வரை தேர்வு செய்வதில் நீடிக்கும் குழப்பம்

நிவேதா ஜெகராஜா

உத்தராகண்ட்டில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் தாமதம் நீடிக்கிறது.

உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றபோதும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார். இதைத் தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து பாஜக தலைமை உத்தராகண்ட் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறது. சத்பால் மகாராஜ், அஜய் பட், மதன் கவுசிக் ஆகியோரில் ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஏற்கனவே முதலமைச்சராக இருந்த புஷ்கர் சிங் தாமியே அந்தப்பதவியில் தொடர வேண்டும் என புதிதாக தேர்வான சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தொண்டர்களும் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமி மீண்டும் போட்டியிட்டு வெல்ல வசதியாக தாங்கள் வென்ற இடங்களில் இருந்து ராஜினாமா செய்ய 6 முதல் 7 பாஜக எம்எல்ஏக்கள் முன்வந்துள்ளதாக உத்தராகண்ட் பாஜக செய்தித் தொடர்பாளர் மன்வீர் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமை இடும் உத்தரவிற்கேற்ப நடந்து கொள்ளப்போவதாக புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில் பாஜக வெற்றிக்கு உழைத்ததால், தான் போட்டியிட்ட கத்திமா தொகுதியில் போதிய கவனம் செலுத்த இயலாமல் போனதாகவும், இதன் காரணமாகவே தோல்வி நேரிட்டதாகவும் தாமி விளக்கம் அளித்துள்ளார்.