டேராடூன் தம்பதி தற்கொலை
டேராடூன் தம்பதி தற்கொலை twitter
இந்தியா

தாய், தந்தையின் சடலத்துடன் பூட்டிய வீட்டுக்குள் 3 நாட்கள் உயிருடனிருந்த பிறந்து 4 நாட்களேஆன குழந்தை!

Prakash J

ஆயிரம் துன்பங்கள் வரட்டுமே... அது அனைத்தும் குழந்தை ஒன்றின் சிரிப்பால் ஒரு நொடியில் மறையும் தருணங்கள் இருக்கிறதே, அந்த இன்பம் கோடி ரூபாய் கிடைத்தாலும் ஈடாகாது. ஆம், அப்படிப்பட்ட ஒரு குழந்தையை அழவைத்து பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? அதிலும், உலகத்தின் காலடியில் வந்து ஓரிரு நாட்கள்கூடக் கழியாத நிலையில், பூட்டிய வீட்டுக்குள் புழு மொய்த்த பெற்றோரின் உடல்களுக்கு இடையே அழுதுகொண்டே, தாய்ப்பாலின்றி 3 நாட்களை ஒரு பச்சிளம் குழந்தை கடத்தியிருப்பதுதான் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. ஆம், பெற்றோர் இறந்தது தெரியாத (அதனால் தான் முடியாதே) அந்தக் குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. அழுவதைத் தவிர, அந்தக் குழந்தைக்கு அப்போது வேறு என்ன தெரியும்? ஏதோ பிரச்னைக்காக அந்தக் குழந்தையின் தாய், தந்தை தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். அதற்காக பச்சிளம் குழந்தையைப் பழிவாங்குவது? பூட்டப்பட்ட வீட்டுக்குள் தாயும் தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள, அவர்களுக்கு பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை ஒன்று, அவர்கள் மீது மொய்த்த புழுக்களுடனேயே படுத்திருந்ததுடன், அழுது கொண்டிருந்ததுதான் கொடுமையின் உச்சம். மனதை உருக்கும், அதுவும் இந்தியாவில் நடந்திருக்கும் இந்தச் செய்தி குறித்து இங்கு காண்போம்.

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள கிளமென்ட் டவுன் பகுதியில் தம்பதி இருவர், 4 மாதத்துக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில், அந்த தம்பதியினர் ஏதோ சில காரணங்களுக்காக அதிருப்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், அந்த பச்சிளம் குழந்தையின் வாழ்க்கை குறித்து அவர்கள் யோசித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.

வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் காவல் துறை சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். கதவை திறந்து பார்த்ததும் காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு புறம் அழுகிய நிலையில் சடலம்.. அருகிலே உலகத்தை காண புதிதாய் மலர்ந்த மொட்டு போன்ற பச்சிளம் குழந்தை. அழுகிய நிலையில் இருந்த உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் காவல்துறையினர். பச்சிளம் குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கிளமென்ட் டவுன் காவல் நிலையப் பொறுப்பாளர் சிசுபால் ராணா கூறுகையில், ”தகவல் கிடைத்தவுடன் நாங்கள் அங்கு சென்று கதவை உடைத்து பார்த்தோம். அப்போது 25 வயதுள்ள ஆண் மற்றும் 22 வயதுள்ள பெண் ஆகியோர் இறந்துகிடந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்றும் அழுதுகொண்டே இருந்தது. குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். அதுபோல், அந்த உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தோம். மருத்துவமனையில் குழந்தையின் உடலை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் காஷிப் என்பதும் அவரது மனைவி பெயர் அனம் என்பதும் இவர்கள் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் 4 மாதத்துக்கு முன்பு கிளமென்ட் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். ஜேசிபி இயந்திர ஓட்டுநரான காஷிப், 5 லட்சம் கடன் வாங்கியிருப்பதும், அதைச் செலுத்த முடியாமல் மனக் கஷ்டத்தில் இருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், காஷிப் முதல் மனைவிக்குத் தெரியாமல் அனத்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால், குடும்பத்தில் பிரச்னை வெடித்துள்ளது. இந்த அழுத்தத்தினால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அதேநேரத்தில் அவர்களது உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை. என்றாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும்” என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து குழந்தைக்குச் சிகிச்சையளித்த மருத்துவமனை மருத்துவரான தனஞ்சய் தோவல், “ஆபத்தான நிலையில் அதேநேரத்தில் சுயநினைவுடன் இருந்த குழந்தை உடனே ஐசியூவில் அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டதில் தற்போது நலமாக உள்ளது. அதேநேரத்தில், தாய்ப்பாலின்றி குழந்தை உயிருடன் 3 நாட்கள் இருந்தது அதிசயம்” எனத் தெரிவித்துள்ளார்.