பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் 26 பேர் பலியாகினர். இதற்கு, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி அளித்தது. இதனால், இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் வாய்ப்பு உருவானது. இரு நாடுகளும் கடுமையாகத் தாக்கிக் கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாக்குதல் முடிவுக்கு வந்தது. எனினும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயர் பேசுபொருளானது. தவிர, இதற்காகச் செயலாற்றிய ராணுவத் தலைவர்களின் பெயர்களும் விவரங்களும் வெளியாகின. இதையடுத்து, 'வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர் தகவல்களை பெற முயற்சி செய்வதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. “ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் என்று கூறி, எந்த நபர் தொடர்பு கொண்டாலும் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எண்ணை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள்போல் வேடமிட்டுச் செயல்படும், பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்” என அது தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பம் பற்றிய விவரங்கள், தகவல்களை வெளியிட வேண்டாம் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணுவ வீரர்கள், குடும்பங்கள் குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம். ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்களின் தனிப்பட்ட விவரங்களை பேட்டியாக வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். தேசிய நலன் கருதி முக்கியமான நேரங்களில் கட்டுப்பாட்டுடன் ஊடகங்கள் செயல்பட வேண்டும். ஊடகங்களுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு அமைச்சகம் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், பொறுப்பாக நடந்துகொள்வதுடன், நாட்டிற்காக பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை கண்ணியத்தை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.