புல்வாமா தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதில் அளித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று புல்வாமா தாக்குதல் குறித்து முதல்முறையாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் இந்தியா ஆதாரத்துடன் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதில் அளித்துள்ளது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார் பாகிஸ்தானில் இருப்பது அனைவரும் அறிந்ததே எனக் குறிப்பிட்டுள்ளது.
புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன எனவும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.