இந்தியா

குடியரசு தின விழா அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: மே.வங்கம், கேரளா கண்டனம்

JustinDurai

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வாகவில்லை. இதற்கு மேற்கு வங்கம், கேரள அரசுகள் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று நடத்தப்படும் விழாவில் பல்வேறு மாநிலங்களின் சிறப்பம்சங்களைப் பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறும். இந்த ஆண்டு மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மட்டுமே மத்திய அரசின் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.

மேற்கு வங்க அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாததற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அதுபற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டுக்கு சேவையாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் சிறப்பம்சங்களுடன் தாங்கள் அலங்கார ஊர்தியை வடிவமைத்திருந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேபோல, கேரளாவின் அலங்கார ஊர்தி தேர்வாகாததற்கு அம்மாநில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் மாநில அலங்கார ஊர்தியில் சங்கராச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டுமென மத்திய அரசு எதிர்பார்த்ததாகவும், ஆனால் சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றதால் நிராகரித்துள்ளதாகவும் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.