இந்தியா

“முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” - உத்தவ் தாக்கரே

“முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்” - உத்தவ் தாக்கரே

webteam

முதலமைச்சர் யார் என்பதை தேர்தல் முடிந்த பின்னர் முடிவு செய்வோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைந்தது. மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பட்னாவிஸ், பாஜகவும் சிவசேனாவும் இந்துத்துவா உணர்வால் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே கூறும் போது, இரண்டு கட்சிகளும் சகோதரர்கள் போல என்றார். சகோதரர்களுக்கு இடையே என்ன வித்தியாசம் இருக்குமோ அது தான் பாஜக - சிவசேனா இடையே இருக்கிறது என்றும், இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். 

ஒருநாள் சிவசேனா தலைவர் ஒருவர் முதலமைச்சராக வருவார் என இதற்கு முன்னர் உத்தவ் தாக்கரே கூறியிருந்ததை குறிப்பிட்டு செய்தியாளர்கள் அப்போது கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதலமைச்சர் யார் என்பதை 24ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் முடிவு செய்வோம் என்று தெரிவித்தார். 

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே அண்மையில் வோர்லி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். மீண்டும் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தால், ஆதித்ய தாக்கரேவை துணை முதலமைச்சராக்க திட்டமிட்டிருப்பதாக சிவசேனா கட்சி தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 150 இடங்களில் பாஜகவும், 124 இடங்களில் சிவசேனாவும், 14 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.