இந்தியா

மாண்டியாவில் பாஜக சார்பில் நடிகை சுமலதா போட்டி?

மாண்டியாவில் பாஜக சார்பில் நடிகை சுமலதா போட்டி?

webteam

கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில், மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது.

தமிழில், திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்தவர் சுமலதா. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் வசித்து வருகிறார். அம்பரீஷ் கடந்த வருடம் நவம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். 

இதையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அம்பரீஷ் போட்டியிட்ட, மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதாக சுமலதா கூறியிருந்தார். ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடாவை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனால்,கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் அந்த தொகுதியை விட்டுத்தர முடியாது என தெரிவித்துள்ளார்.


 
இருந்தாலும் மண்டியாவில் போட்டியிட காங்கிரஸ் தமக்கு வாய்ப்பு வழங்கும் என்றும், இல்லை என்றால் அங்கு சுயேச்சையாக போட்டியி டுவேன் என்றும் சுமலதா தெரிவித் திருந்தார். சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக பாஜக தெரிவித் துள்ளது. இதற்கிடையே மாண்டியா தொகுதியில் போட்டியிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் சிவகுமார் அவருக்கு அழுத்தம் தருவதாகக் கூறப்பட்டது. 

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுமலதா, ’’எனக்கு, சிவகுமார் அழுத்தம் எதையும் தரவில்லை. வேறு தொகுதியில் போட்டியிடலாமே என்று ஆலோசனைதான் சொன்னார். அரசியலில் கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருந்தாலும் வரும் 18 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன்’’ என்றார்.

இதற்கிடையே, அவரை பாஜக தலைவர்கள் சிலர் சந்தித்து பேசி வருவதாகவும் பாஜக சார்பில் அவர் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.