காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல்காந்தியின் முடிவை ஏற்றுக்கொள்ள அக்கட்சி மூத்த தலைவர்கள் மறுக்கின்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தபோதும், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு என பிராந்தியங்களை உருவாக்கி அதற்கு செயல் தலைவர்களை நியமித்து ராகுல்காந்திக்கு உதவலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. எனினும் இந்த யோசனை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
பஞ்சாப், மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நிலவும் உள்கட்சி பூசல், தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால் ராகுல்காந்தியே கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ராகுல்காந்தி தலைவராக நீடிக்கும் பட்சத்தில் கேரள சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பியதும் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. பின்னர் தேர்தலில் முழுமனதுடன் உழைக்காத மூத்த தலைவர்களை பதவியில் இருந்து விடுவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.