இந்தியா

கேரள நிலச்சரிவு: உயிரிழப்பு 37 ஆக உயர்வு

webteam

கேரள வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து நீரானது ஊருக்குள் புகுந்துள்ளது. நேற்று முன் தினம் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் பெட்டிமுடி மற்றும் ராஜமலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நான்கு டீ எஸ்டேட் தோட்டத்தில் பணி புரிந்து வந்த தொழிலாளர்களின் 30 வீடுகள் நிலச்சரிவில் வீழ்ந்தன. இதில் பலர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து தேவிகுளம் துணை மாவட்ட ஆட்சியர் எஸ். பிரேம் கிருஷ்ணன் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேசிய போது “ தற்போது வரை 44 நபர்கள் காணாமல் சென்றுள்ளனர். ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த 21 நபர்களில், பெரும்பாலான நபர்களை காணவில்லை. மயில்சாமி என்பவரின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அவர் எர்ணாகுளம் பூங்காவில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.

இன்று காலை அங்கு மழை இல்லை. அதனால் மீட்புப் பணிகளை உட்சபட்ச வேகத்தில் கையாண்டு வருகிறோம். முன்னதாக அங்கு கனமழை பெய்து வந்ததால் மீட்புப் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு நிலச்சரிவு நடந்தப் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயான மைதானத்தை உருவாக்கியுள்ளோம். உடற்கூராய்க்குப் பிறகு அவர்களின் சடலங்கள் அங்கு புதைக்கப்படும்” என்றார்.