அசாமில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த டீ தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.
கோலகாட் மாவட்டத்தின் ஜோர்ஹட் பகுதியிலுள்ள டீ தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் நேற்று கூட்டாக நாட்டு சாராயம் குடித்துள்ளனர். ரூ10, ரூ20க்கு விற்கப்பட்ட அந்தச் சாராயத்தில் நச்சுத்தன்மை அதிகம் இருந்துள்ளது. அதனால், அந்த நாட்டு சாராயத்தை குடித்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நேற்று வரை 30 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. சிலருக்கு இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அசாம் அரசு உடனடியாக உத்தரவிட்டுள்ளது. அத்தோடு, டிஜிபி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் சோனோவால் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை அமைச்சர் பிஸ்வா சர்மா ஜோர்ஹட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.