இந்தியா

சிறார்களுக்கு பா‌லியல் கொடுமை - மரண தண்டனைக்கு மக்களவை ஒப்புதல் 

சிறார்களுக்கு பா‌லியல் கொடுமை - மரண தண்டனைக்கு மக்களவை ஒப்புதல் 

webteam

சிறார்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்க வழிவகுக்கும் போக்சோ சட்ட திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சிறாருக்கு பாதுகாப்பு தரும் போக்சோ சட்ட திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மக்களவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இம்மசோ‌தவை தாக்கல் செய்து பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இச்சட்டத்திருத்தம் மூலம் நாட்டிலுள்ள 43 கோடி சிறார்களுக்கு பாலியல் கொடுமைகளில் இருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சாட்சியளிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குழந்தைகளை வைத்து பாலியல் படங்களை எடுப்பதை தண்டனைக்குரிய குற்றமாக இம்மசோதா வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறினார். நாடெங்கும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் நல்ல தொடுதல், தீய தொடுதல் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் தரப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இம்மசோதாவுக்கு கட்சி பேத‌மின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தந்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது