இந்தியா

குடியரசுத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது.. தூக்குத் தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதிமன்றம்

குடியரசுத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது.. தூக்குத் தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதிமன்றம்

Rasus

நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நிர்பயா பாலியல் வழக்கில் நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு வருகிற ஒன்றாம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில் உத்தரவி‌ட்டது. இதற்‌கு எதிராக குற்றவாளிகள் ஒவ்வொருவராக சீராய்வு மனு தாக்கல் செய்தனர்‌.

அதில்‌ முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த 1‌7-ஆம் தேதி நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய‌ப்பட்டது. இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க‌ வேண்டும் என்று முகேஷ் குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தூக்குத் தண்டனைக்காக காத்திருப்பவரின் வழக்கை விட வேறு எதுவும் அவசரமானதாக இருக்க முடியாது எனக் கூறி அதை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை; அவ்வாறு செய்யவும் முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து குற்றவாளியின் தூக்குத் தண்டனையை மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.