புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால் இந்தியாவில் மிக அபாயகரமான அனல் காற்று வீசக்கூடும் என பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
IPCC எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு நாடுகளை சேர்ந்த குழு தயாரித்துள்ள அறிக்கையில், வரும் 2030 முதல் 2052-ஆம் ஆண்டிற்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புவியின் வெப்பநிலை உயர்வது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மிக அபாயகரமான அனல் காற்று வீசும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கொல்கத்தா மற்றும் கராச்சி நகரங்களில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கும் என கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் போது மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவது அதிகரிக்கும் என்றும், சுகாதார பிரச்னைகள் ஏற்பட்டு பலர் வறுமைக்கு ஆளாக நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது.