இந்தியா

ஆதார் இணைப்பு காலக்கெடு மார்ச் வரை நீட்டிப்பு

ஆதார் இணைப்பு காலக்கெடு மார்ச் வரை நீட்டிப்பு

webteam

பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ள மத்திய அரசு, வங்கி கணக்கு எண், செல்போன் எண் போன்றவற்றுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவாக டிசம்பர் 31 ஆம் தேதியை அறிவித்துள்ளது.

ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டப்பட்டது. இதற்காக 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அடுத்த வாரம் அமைக்கப்பட இருக்கிறது.

இந் நிலையில் ஆதார் தொடர்பான வழக்குகளில் சில, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து  மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க, மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார். செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவில் (பிப்ரவரி 6 ) என்பதில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.