நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என டெல்லி பெண்கள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
தலைநகர் டெல்லியில், கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பாட்டார். கொடூரமாக தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து சாலையில் வீசியெறியப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் மூன்று ஆண்டு தண்டனை அனுபவித்த பிறகு விடுதலையானார். கடந்த ஆண்டு 2013 ஆம் ஆண்டு ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் மற்ற 4 பேருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 2015-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் அதை உறுதி செய்தது.
தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 5 மாதங்கள் ஆன பின்னரும் தண்டனை நிறைவேற்றாமல் இருப்பது ஏன் என நிர்பயாவின் பெற்றோர், பெண்கள் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இதன்பேரில் திகார் சிறை நிர்வாகத்திற்கு பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.