இந்தியா

சிறுமிக்கு பாலியல் தொல்லை; அடுத்த நாளே தாய் ஆசிட் வீசி கொலை - உ.பி.யில் பயங்கரம்

ஜா. ஜாக்சன் சிங்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் சிலர், அதற்கு அடுத்த தினமே அவரது தாயாரை ஆசிட் வீசி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரு வாரங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டு வாசலில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த சிறுமியின் தந்தை, அந்த இளைஞர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த இளைஞர்கள் கலைந்து சென்றனர். இந்த சூழலில், அன்றைய தினம் மாலையில் சிறுமி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த இளைஞர்கள் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை அப்பகுதி காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். ஆனால் போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை. பின்னர், சிறுமியின் தந்தை அங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகளை அழைத்து வந்து போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், நேற்று முன்தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் மீது வழக்கு பதியப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், சிறுமியிடமும், அவரது தந்தையிடமும் புகாரை திரும்பப் பெறுமாறு கூறி மிரட்டியுள்ளனர். எனினும், அவர்கள் புகாரை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.

இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்ற இளைஞர்கள், சிறுமியின் குடும்பத்தினரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதற்காக நேற்று இரவு ஒரு பீப்பாயில் ஆசிட்டை எடுத்து வந்த அவர்கள், அதனை சிறுமியின் வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே இருந்த ஒரு அறையில் கொட்டினர்.

இதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த சிறுமியின் தாயும், தந்தையும் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி வந்து பார்த்த போது, அவர்களின் உடல் ஆசிட்டில் வெந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை மானபங்கப்படுத்தியதுடன் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் மீதும் இளைஞர்கள் ஆசிட் வீசிய கொடூர சம்பவம் உத்தரபிரதேச மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட 6 இளைஞர்களை கைது செய்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்காத குற்றத்துக்காக காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரை பிலிபிட் மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.