இந்தியா

விளம்பர வருவாயில் 85% பங்கை செய்தித்தாள் நிறுவனங்களுக்கு வழங்க கூகுளுக்கு INS கோரிக்கை

JustinDurai

'இணையதள விளம்பரங்களில் செய்தித்தாள் பதிப்பாளர்களுக்கு 85 சதவீத பங்கு வழங்க வேண்டும்' என்று  கூகுள் நிறுவனத்திடம் ஐ.என்.எஸ்.  நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவர் எல்.ஆதிமூலம், 'கூகுள் இந்தியா' மேலாளர் சஞ்சய் குப்தாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ''நாடு முழுதும் ஆயிரக்கணக்கான செய்தியாளர்களை பணியமர்த்தி நாளிதழ்கள் செய்தி சேகரிக்கின்றன. இதற்கு பெரும் அளவிலான பணம் செலவு செய்யப்படுகின்றன. செய்தி ஊடகங்கள் விளம்பர வருமானத்தை பெரிதும் நம்பியுள்ளன. இன்றைய டிஜிட்டல் வெளியில் செய்தித்தாள் நிறுவனங்களின் விளம்பர வருமானம் ஏற்கனவே கணிசமாக குறைந்து உள்ளது.

இதில், இணையதள விளம்பரங்களுக்கான வருமானத்தில் கூகுள் நிறுவனம் பெரும் பங்கை எடுத்துக் கொள்கிறது. இது செய்தித்தாள் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடியை தருகிறது. எனவே, விளம்பர வருமானத்தில் 85 சதவீதத்தை பதிப்பாளர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், செய்தித்தாள்களில் இருந்து எடுத்து பயன்படுத்தப்படும் செய்திகளுக்கு கூகுள் நிறுவனம் பணம் செலுத்த வேண்டும்.

ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், இது போன்ற நடைமுறைகளை கூகுள் நிறுவனம் ஏற்கும் நிலையில், இந்திய பதிப்பாளர்களும் பலன் அடைய வேண்டும்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.