இந்தியா

இமாச்சலப் பிரதேசம் - பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர்

Veeramani

ஆம் ஆத்மி கட்சியின் இமாச்சலப் பிரதேச தலைவர் அனுப் கேசரி மற்றும் இரண்டு மூத்த தலைவர்கள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உன்னா மாவட்டத் தலைவர் இக்பால் சிங் உள்ளிட்ட மூவரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.



இரண்டு நாட்களுக்கு முன்பு இமாச்சலப் பிரதேசத்தில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “மிஷன் ஹிமாச்சல்” என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார். இப்பேரணியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் கலந்துகொண்டார்.

இந்தப் பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "முதலில் டெல்லியில் ஊழலை ஒழித்தோம், பின்னர் பஞ்சாபில் ஊழலை ஒழித்தோம், இப்போது இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து ஊழலை அகற்றுவதற்கான நேரம் இது. எங்கள் கட்சிக்கு அரசியல் செய்யத் தெரியாது. ஆனால் மக்களுக்காக பணியாற்றுவது, பள்ளிகளை கட்டுவது, ஊழலை ஒழிப்பது எப்படி என்று தெரியும்" எனக் கூறினார்


 
கடந்த மாதம், ஆம் ஆத்மி கட்சி இமாச்சலப் பிரதேசத்தில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த எட்டு பேர் கொண்ட குழுவை நியமித்தது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இமாச்சல் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.