இந்தியா

முர்ஷிதாபாத் கொலை சம்பவத்தில் அரசியல் தொடர்பு இல்லை - காவல்துறை

rajakannan

மேற்குவங்கத்தை உலுக்கிய முர்ஷிதாபாத் கொலை சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

முர்ஷிதாபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தையே உலுக்கியுள்ளது. எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த முக்கியமான காரணம், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண். மற்றொருவர் 8 வயது சிறுவன். இந்த கொலை சம்பவம் முக்கிய பேசுபொருளாக மற்றொரு காரணம் கொல்லப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர். அதனால், இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், முர்ஷிதாபாத் கொலை சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்று மேற்குவங்க காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், முதல்கட்ட விசாரணையில் கடன் பிரச்னைகள் காரணமாகவும், கணவன், மனைவி உறவில் இருந்த சிக்கல்கள் காரணமாகவும் நடந்திருக்கலாம் எனவும் முர்ஷிதாபாத் எஸ்பி முகேஷ் குமார் தெரிவித்தார். இது முற்றிலும் கிரிமினல் சம்பவம் என்று அவர் உறுதியாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, முர்ஷிதாபாத் கொலை சம்பவத்திற்கு மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.