இந்தியா

யார் இந்த தாவூத் இப்ராஹிம்? பின்னணி என்ன?

webteam

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமை பயங்கரவாதியாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. யார் இந்த தாவூத் இப்ராஹிம், அவரது பின்னணி என்ன?

மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு முதல் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும், பாலிவுட் நடிகர், நடிகைகளை மிரட்டி பணம் பறித்த விவகாரங்களிலும் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் தாவூத் இப்ராஹிம். 

காவலரின் மகனாக இருந்து பின்னாளில் நிழல் உலக தாதாவாக மாறியவர் தான் இந்த தாவூத் இப்ராஹிம். மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1955 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். எட்டு சகோதரர்கள், நான்கு சகோதரிகள் என பெரிய குடும்பம். மும்பை காவல்துறையில், இவரது தந்தை காவலர். ஆனால் மகனோ சிறு வயது முதல் கட்டபஞ்சாயத்தில் ஈடுபடும் குற்றவாளியாக வளர்ந்தார்.

பின்னாளில் போதைப் பொருட்கள் கடத்தல், கொலை என தாவூத் இப்ராஹிமின் சமூக விரோத செயல்கள் கிளைப் பரப்பத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பயங்கரவாத செயல்களுக்கு துணை போன தாவூத் இப்ராஹிம், 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சதித் திட்டத்தையும் தீட்டி கொடுத்திருக்கிறார்.

மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பின் பாகிஸ்தானில் மறைந்து வாழும் தாவூத் இப்ராஹிம், அங்கிருந்தபடியே தொடர்ந்து தனது கிரிமினல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு படைத்த தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்டட்டின் சம்பந்தி என்பது பலரும் அறிந்த செய்தி. 2011 ஆம்ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட மோசமான 10 கிரிமினில்களின் தரவரிசைப் பட்டியலில் தாவூத் இப்ராஹிமுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

தாவூத் இப்ராஹிமின் கிரிமினல் செயல்களை விவரிக்கும் வகையில், இந்தியில் பல்வேறு திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. சல்மான் நடிப்பில் வெளியான 'சோரி சோரி சுப்கே சுப்கே' என்ற திரைப்படத்தை தாவூத் இப்ராஹிமின் நிறுவனம் தான் தயாரித்ததாக ஒரு தகவலும் இருக்கிறது. தாவூத் இப்ராஹிம்-ன் முக்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல் மும்பையில் இருந்தபடி திரைப்பட தயாரிப்புக்கு கடன் அளிப்பது என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுவதுண்டு.

சர்வதேச அளவிலான போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்தலிலும் தாவூத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. தற்போது 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாவூத் பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.