சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, விமானங்களில் நிலவும் அலட்சியமற்ற சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அடிக்கடி ஏர் இந்தியா நிறுவனம் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஏர் இந்தியாவின் விமானச் சேவைகள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”விமானத்தை இயக்க விமானி இல்லை எனத் தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவருடைய குற்றச்சாட்டுக்கு மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
"அன்புள்ள திரு. வார்னர், பெங்களூருவில் இன்றைய சவாலான வானிலை அனைத்து விமான நிறுவனங்களிலும் பயண நேர மாற்றங்களையும் தாமதங்களையும் ஏற்படுத்தியது. உங்கள் விமானத்தை இயக்கும் குழுவினர் இந்த இடையூறுகளால் பாதிக்கப்பட்ட முந்தைய பணியில் சிக்கிக் கொண்டனர், இதனால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. உங்கள் பொறுமைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், எங்களுடன் பறக்கத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி" என அது தெரிவித்துள்ளது.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) எம்.பி. சுப்ரியா சுலேவும், இந்திய - கனேடிய நடிகை லிசா ரேயும் ஏர் இந்தியாவின் விமானச் சேவைகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.