இந்தியா

எனது மகள் சட்டவிரோதமாக மதுபான 'பார்' நடத்துகிறாரா? காங்கிரஸ் மீது ஸ்மிருதி இரானி பாய்ச்சல்

ஜா. ஜாக்சன் சிங்

தனது மகள் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்தி வருவதாக காங்கிரஸ் கூறியுள்ள புகாரை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது சொந்த தொகுதியான அமேதியில் தோற்கடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்மிருதி இரானி. காங்கிரஸையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சிப்பவர்களில் ஸ்மிருதி இரானியும் ஒருவர். தற்போது அவர் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் மகள் மீது காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா ஆகியோர் நேற்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதாவது, ஸ்மிருதி இரானியின் மகளான ஜோய்சி கோவாவில் ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வருவதாகவும், அதில் சட்டவிரோதமாக மதுபான பார் இயங்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த செயலுக்கு பொறுப்பேற்று ஸ்மிருதி இரானியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தக் குற்றச்சாட்டு பெரும் புயலை கிளப்பிய சூழலில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஸ்மிருதி இரானி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நான் சுமத்தியிருக்கிறேன். அவர்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்தாக நான் கூறினேன். இந்த காரணத்துக்காகவே எனது மகளை காங்கிரஸ் குறி வைத்துள்ளது. எனது மகள் அரசியல்வாதி அல்ல. அவர் சாதாரண கல்லூரி மாணவி. அவர் எந்த மதுபான பாரையும் நடத்தவில்லை. உண்மைத்தன்மையை ஆராயாமல், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை வைத்து அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். பொய் குற்றச்சாட்டை கூறிய ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பவுள்ளேன். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.