எல்லையில் பணியாற்றிய ராணுவ வீரரான தனது தந்தையை கொன்று அவருடைய உடலை சிதைத்ததற்குப் பழி வாங்க பாகிஸ்தானின் 50 ராணுவ வீரர்களின் தலைகள் வெட்டப்பட வேண்டும் என மறைந்த ராணுவ வீரர் பிரேம் சாகரின் மகள் சரோஜ் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் பரம்ஜித் சிங் மற்றும் பிரேம் சாகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இரு வீரர்களின் உடல்களையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்து, தலையை துண்டித்துள்ளனர். பாகிஸ்தானின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ராணுவ வீரர் பரம்ஜித் சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டார்ன் தாரன் மாவட்டத்தை சார்ந்தவர், பிரேம் சாகர் உத்தரப்பிரதேசத்தை சார்ந்தவர். தன் தந்தையை இழந்த சோகத்திலும் அவரது உடல் சிதைக்கப்பட்ட கோபத்திலும் இருந்த அவர் மகள் சரோஜ் அளித்த பேட்டியில், “தனது தந்தை சாவை பழி வாங்க 50 பாகிஸ்தான் வீரர்களின் தலைகளை வெட்டி எடுக்க வேண்டும். இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்,” என கூறியுள்ளார். பிரேம் சாகர் 23 வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்.