வடகிழக்கு டெல்லி வன்முறையின்போது எரிக்கப்பட்டு கிடந்த ஒரு உடலின் எஞ்சிய பாகத்தை வைத்து அது தனது தந்தையுடையதா என அடையாளம் காண இஸ்லாமிய பெண் ஒருவர் காத்திருக்கிறார்.
வடகிழக்கு டெல்லியில் வசித்து வருபவர் இளம் பெண் குல்ஷன். இவரது கணவர் முகமது நஸ்ருதீன். இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. ஆடு விற்பனை செய்யும் 61 வயதான குல்ஷனின் தந்தை அன்வரின் வருமானத்தை நம்பியே இந்த இளம் தம்பதியினர் காலத்தை ஓட்டி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் நடந்த கலவரம், குல்ஷன் குடும்பத்தையும் விட்டுவைக்க வில்லை.
வன்முறையின்போது தொழிலுக்குச் சென்ற குல்ஷனின் தந்தை வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக கலவரம் அடங்கிய பின்னர் குல்ஷன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் டெல்லி மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் போய் பார்க்குமாறு கூறியுள்ளனர். அங்கு சென்றபோது, ஒரு கால் மட்டும் எஞ்சிய நிலையில் மற்றவை முற்றிலும் எரிந்த உடலை குல்ஷனுக்கு அங்கிருந்தவர்கள் காட்டியுள்ளனர். காலை மட்டும் வைத்து அந்த உடல் தனது தந்தையுடையதா என அடையாளம் காண்பதில் குல்ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டதால், டிஎன்ஏ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து டெல்லி மருத்துவமனை சவக்கிடங்கு அறையின் வெளியே டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக கடந்த 29-ஆம் தேதி முதல் பார்வை மாற்றுத்திறனாளி கணவருடன் காத்திருக்கிறார் குல்சன்.
இது குறித்து குல்ஷன் கூறும்போது “அது எனது தந்தையின் உடல்தானா என்பதை எப்படி நான் நம்புவது. ஒரு காலை வைத்து எப்படி அடையாளம் காண முடியும். இரண்டு நாட்களுக்கு முன் டிஎன்ஏ பரிசோதனைக்காக அழைத்தார்கள். இன்னும் பரிசோதனை முடிவு கிடைக்கவில்லை. கிடைத்த பின்பே இறந்தது என் தந்தையா என்று தெரியவரும்” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.