இந்தியா

இந்திய வாக்காளர்களின் தகவல்களை அரசியல் கட்சிகளுக்கு விற்றதா ஃபேஸ்புக்? - விரிவான அலசல்!

Veeramani

பேஸ்புக் மூலம் பெறப்பட்ட முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் தரவு தொகுப்பு எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் அல்லது எந்த அரசியல் கட்சிக்கும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை அல்லது விற்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை பதிவு செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உதவுவதற்காக பேஸ்புக் தனது தளத்தை வழங்கியது. ஆனால் இதை இலவசமாக பேஸ்புக் செய்ய முன்வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்துடனான இந்த கூட்டணி. முதல் முறையாக வாக்களிக்கும் இலட்சக்கணக்கான இந்திய வாக்காளர்களின் மிகப்பெரிய , விலைமதிப்பற்ற தகவல் தொகுப்பினை உருவாக்க பேஸ்புக்கிற்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

பேஸ்புக் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக விலைக்கு விற்கக்கூடிய தகவல் தொகுப்பினை உருவாக்கவும் இது வழிசெய்திருக்கலாம். உதாரணமாக, மக்களவை தேர்தலில் ஒரு அரசியல் கட்சி போட்டியிடுவதை கற்பனை செய்து பாருங்கள், இது முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை இலக்காகக் கொண்டிருக்கலாம். ஆனால் நாடு முழுவதிலுமுள்ள வாக்காளர்கள் மிகவும் வித்தியாசமாக இருப்பார்கள், அவர்களுக்கான அத்தியாவசிய பிரச்சினைகள் கூட ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிறைய வேறுபடுகின்றன.

இப்போது, ஒரு அரசியல் கட்சி இந்தியா முழுவதிலும் இருந்து இந்த முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களைப் பற்றிய தகவல் தொகுப்பினை பெறும்பட்சத்தில், அவர்களின் பெயர்கள், வயது மற்றும் முகவரிகள் மட்டுமல்லாமல் அவர்களின் மின்னஞ்சல், மொபைல் எண்கள், தனிப்பட்ட விருப்பங்கள், கல்வித் தகுதிகள், அரசியல் சார்புகள், வருமான நிலை, சாதி, சமூகம்  என அனைத்தைப்பற்றியும் அறிய இது உதவி செய்யும். இது இந்த வாக்காளர்களை நேரடியாக அடைவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், ஒரு அரசியல் கட்சி ஒவ்வொரு வாக்காளரையும் அவரின் குறிப்பிட்ட தன்மைக்கு ஏற்ப குறிவைக்க அனுமதிக்கும். எனவே, அத்தகைய தகவல் தொகுப்பினை பெறும் அரசியல் கட்சிக்கு, அதன் போட்டி கட்சிகளை விடவும் அதிக நன்மைகள் கிடைக்கும்.

பேஸ்புக் பெற்ற இத்தகைய தகவல்தொகுப்பினை இதற்கு முன்னர் தவறாக பயன்படுத்தியுள்ளதா?

மார்ச் 2018 இல் குற்றம்சாட்டப்பட்ட பேஸ்புக்-கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தகவல் தொகுப்பு முறைகேட்டில், தரவு பகுப்பாய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா 50 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தரவைப் பெற்றிருப்பது தெரியவந்தது. இந்த மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனர்களின் அனுமதியின்றி, அரசியல் விளம்பர இலக்குகளுக்காக இந்தத் தரவைப் பயன்படுத்தி, டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க கேம்பிரிட்ஜ் அனாலிடிகா உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதுபோல பேஸ்புக் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இது நடந்திருக்க முடியுமா? இது விசாரிக்கப்பட வேண்டிய கேள்வியாகவே உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா குற்றச்சாட்டிற்கு பிறகு, தரவு மீறல் எதுவும் இல்லை என்றும், கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவை தனது சேவையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகவும் பேஸ்புக் கூறியது. அந்த நேரத்தில், பேஸ்புக்கின் இந்திய பயனர்களிடையே ஏதேனும் தரவு மீறல் நடந்திருக்கிறதா என்று இந்திய அரசு பேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவிடம் கேட்டிருந்தது. இதுகுறித்து சிபிஐயும் விசாரிப்பதாக தெரிவித்தது, ஆனால் இந்த விசாரணையின் நிலை என்ன என்று இன்றுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

வாக்காளர்களின் தகவல் தொகுப்பை முறைகேடாக பயன்படுத்தியதா பேஸ்புக்- தேர்தல் ஆணையம் விழிப்போடு இருந்ததா?

2018இல் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா குற்றச்சாட்டு வெளியாகும் ஒரு வருடத்திற்கு முன்னதாக இந்தியாவின் தேர்தல் ஆணையம் பேஸ்புக் உடனான கூட்டாண்மைக்குள் நுழைந்தது, இது பல்லாயிரக்கணக்கான இந்திய பயனர்களின் தனிப்பட்ட தரவை அபகரிக்க உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், பேஸ்புக் 200 மில்லியனுக்கும் அதிகமான இந்திய பயனர்களைக் கொண்டிருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த தேர்தல் ஆணையம் மற்றும் பேஸ்புக் கூட்டாண்மைக்கு "முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு இயக்கி" என்று பெயரிடப்பட்டது. இந்தியாவில் 19 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பேஸ்புக் பயனர்களுக்கும், தங்கள் செய்தி ஊட்டங்களின் வழியே வாக்களிக்க பதிவு செய்ய நினைவூட்டல் அனுப்பப்பட்டது. ‘இப்போது பதிவுசெய்க’ பொத்தானைக் கிளிக் செய்தால் , பயனர்கள் தேசிய வாக்காளர்கள் சேவைகள் போர்ட்டலுக்கு அனுப்பப்படுவார்கள். 13 இந்திய மொழிகளில் இப்பிரச்சாரத்தை விளம்பரப்படுத்த பேஸ்புக் முன்வந்தது.

மேலும் "அனைத்து பயனர்களுக்கும் நினைவூட்டல்களை அனுப்புவது மற்றும் வீடியோ பதிவுகளை மேம்படுத்துதல் தொடர்பான அனைத்து செலவுகளும் பேஸ்புக்கால் செலுத்தப்படும், தேர்தல் ஆணையத்திற்கு எந்த செலவும் இருக்காது" என்றும் பேஸ்புக் தெரிவித்தது. ஆனால் பேரம் பேசும்போது, பேஸ்புக் அதன் பயனர்களில் எத்தனை பேர் வாக்காளர்களாக பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர் என்பதை அறிந்து கொண்டது.

இந்த பிரச்சாரத்தில் 2018 ஆம் ஆண்டில் பேஸ்புக்  “பதிவுசெய்தபின் பகிரவும்” என்ற மற்றொரு முக்கிய அம்சத்தையும் சேர்த்தது, இதனால் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளராக பதிவுசெய்த ஒவ்வொரு பயனரைப் பற்றிய தகவல் தொகுப்பினை இந்த தளம் பேஸ்புக்கிற்கு உறுதிப்படுத்தியது. பேஸ்புக் உண்மையில் இந்த தகவலை எந்த அரசியல் கட்சியுடனும் பகிர்ந்து கொண்டதா, என்பது தெரியவில்லை.

ஏனென்றால் தகவல் அறியும் உரிமை மூலம் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே நாம் கேள்வி கேட்க முடியும்,  பேஸ்புக்கிடம் நாம் எதுவும் கேட்க முடியாது.  தேர்தல் ஆணையம் மற்றும் பேஸ்புக் கூட்டாண்மை தொடர்பான தகவல் அறியும் ஆவணங்களின்படி ” தகவல் தொகுப்பு பேஸ்புக்கால் பாதுகாக்கப்படும் என்பதை அந்நிறுவனம் எவ்வாறு உறுதி செய்யும் என்பதில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எழுப்பிய ஒரு கவலையும் கேள்வியும்  அந்த ஆவணத்தில் எங்கும் இல்லை. பேஸ்புக்கின் இந்திய பயனர்களின் தனியுரிமை மீறப்படாதா என்று எந்த கேள்வியும் அவர்களால் கேட்கப்படவில்லை, மேலும் இந்த தரவை எந்த மூன்றாம் தரப்பினருக்கும் பேஸ்புக் பகிருமா அல்லது விற்குமா என்பது குறித்து எந்த கேள்வியும்  தேர்தல் ஆணையத்தின் தரப்பிலிருந்து கேட்கப்படவில்லை” என தெரியவந்துள்ளது.

அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத் அந்த நேரத்தில், இக்கூட்டாண்மை தொடர்பான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து ராவத் “ ஒரு கூட்டத்தில், எனது ஜூனியர்களால் இந்த திட்டம் பேஸ்புக்கோடு பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கும் என தோன்றியதால் அதைத் தொடங்கலாம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு, எல்லாம் துணைத் தேர்தல் ஆணையர்களின் மட்டத்தில் செய்யப்பட்டது ” என அவர் கூறினார்

தேர்தல் ஆணையத்திற்கான கேள்விகள் இங்கே:

இந்தியாவில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களைப் பற்றிய தகவல்தொகுப்பினை உருவாக்க  பேஸ்புக்குடனான கூட்டாண்மைக்கு தேர்தல் ஆணையம் ஏன் நுழைந்தது?

பேஸ்புக் மூலம் பெறப்பட்ட முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் தரவு எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் அல்லது எந்த அரசியல் கட்சிக்கும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை அல்லது விற்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கைகள் எடுத்தது?

பேஸ்புக் இந்த வாக்காளர் பதிவு கூட்டாண்மையை இலவசமாக வழங்கியபோது, அது தேர்தல் ஆணையத்துக்கு ஆபத்தானதாக தெரியவில்லையா?

 பேஸ்புக்-கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தரவு மீறல் சர்ச்சை இருந்தபோதிலும், தேர்தல் ஆணையம் ஏன் பேஸ்புக் உடனான கூட்டாண்மையை தொடர்ந்தது?

பேஸ்புக்கின் உண்மையான தகவல் பாதுகாப்பு நடைமுறைகள் தங்களின் பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்துமா என்பதை தேர்தல் ஆணையம் தணிக்கை செய்ததா?

Source: The quint / Poonam Agarwal