- ந.பால வெற்றிவேல்
இந்தியாவில் வர்த்தக விமானங்களை தயாரிக்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் , அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, கனடா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவும் வர்த்தக விமானம் தயாரிக்கும் நாடாக வளர்ந்துள்ளது.
உலக விமானத் துறையில் இந்தியாவின் இடத்தை வலுப்படுத்தும் வகையில், பிரான்சில் இயங்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, ஃபால்கன் 2000 எல்.எக்ஸ்.எஸ். பிசினஸ் எக்ஸிக்யூட்டிவ் ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க புதிய ஒப்பந்தத்தை பாரிஸ் ஏர் ஷோவில் இன்று அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், பிரான்ஸுக்கு வெளியே ஃபால்கன் ஜெட் தயாரிக்கும் முதல் உற்பத்தி மையமாக இந்தியா மாற போகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள MIHAN பகுதியில் உள்ள Dassault Reliance Aerospace Limited (DRAL) எனும் இடத்தில் இந்த உற்பத்தி நடைபெறவுள்ளது. பிரான்சை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் 100 ஆண்டுகளாக 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களை விநியோகித்துள்ளது.