இந்தியா

ராஜஸ்தான்: முறுக்கு மீசையுடன் மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்ததாக பட்டியலின இளைஞர் கொலை

ஜா. ஜாக்சன் சிங்

முறுக்கு மீசையுடன் மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்ததால், ராஜஸ்தானில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரபால் மேஹ்வால் (22). அந்த மாவட்டத்தில் கரோனா சிகிச்சை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரான இவர், எப்போதுமே நேர்த்தியான ஆடைகளை அணிந்து மிடுக்காக காட்சியளிப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்காக அந்தப் பகுதியில் அவருக்கு தனி மரியாதை உண்டு.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமமான பார்வாவுக்கு ஜிதேந்திர பால் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஜிதேந்திர பாலிடம் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, முறுக்கு மீசையுடன் இருந்த அவரது தோற்றத்தையும், அவரது ஜாதியையும் சம்பந்தப்படுத்தி அந்த இளைஞர்கள் கேலி பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜிதேந்திர பால், அந்த இளைஞர்களை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் உருவானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது நண்பருடன் ஜிதேந்திர பால் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல், ஜிதேந்திர பாலை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பார்வா கிராமத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.