இந்தியா

கட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட தலித் தொழிலாளி

கட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட தலித் தொழிலாளி

webteam

குஜராத் மாநிலத்தில் தலித் கூலித் தொழிலாளி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் முகேஷ் வன்னியா. கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குப்பையை அகற்றுவதற்காக சென்றுள்ளார். வழக்கமாக இவர்கள் சாக்குப்பைகளையும் குப்பையில் இருந்து இரும்பு பொருட்களை பிரித்து எடுப்பதற்காக காந்தத்ததையும் கையில் வைத்திருப்பர். இந்நிலையில் வாகன உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலையில் குப்பையை எடுப்பதற்காக சென்றுள்ளனர். காந்தங்களை பயன்படுத்தி குப்பைகளில் உள்ள இரும்புகளையும் பிரித்து எடுத்துள்ளனர்.

இவர்களின் செயலில் சந்தேகமடைந்த ஊழியர்கள் இவர்களை திருடர்கள் எனக் கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கணவன் மனைவி இருவரையும் தாக்க ஆரம்பித்துள்ளனர். முகேஷை அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்து 5பேர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தலித் என்பதால் இவர்களை கூறியதை ஏற்க மறுத்து தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த அவரது மனைவி தனது கிராமத்திற்கு சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வந்துள்ளார். தொழிற்சாலைக்கு வந்து அவர்கள் பார்த்த போது முகேஷ் கீழே இறந்து கிடந்தார். 

இந்நிலையில் முகேஷை கட்டி வைத்து அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவியது. இதில் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட 5பேர் அவரை தாக்குவது பதிவாகியுள்ளது. கம்பத்தில் அவரை கயிற்றால் கட்டி இரும்பு கம்பிகளைக் கொண்டு கடுமையாக தாக்குகின்றனர். அவர் வலி தாங்க முடியாமல் கதறுகிறார். இருப்பினும் இறக்கமில்லாத அந்தக்கூட்டம் அவரை கடுமையாக தாக்குகிறார்கள். இந்த விவகாரம் தற்போது கடுமையாக விவாதத்திற்குள்ளானது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என அம்மாநிலத்தின் சுயேட்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 5பேரை கைது செய்துள்ளனர்.