ஆந்திராவில், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மகேஸ்வரி மற்றும் ஆடம் ஸ்மித். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வெகுநாட்களாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரிடம் தெரியப்படுத்திய நிலையில், மகேஸ்வரியின் குடும்பத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து மகேஸ்வரி தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி, இருவரும் தங்கள் ஊரை விட்டு வெளியேறி நவம்பர் 12-ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் ஆவேசமடைந்த மகேஸ்வரியின் உறவினர்கள் ஆடம் ஸ்மித்துக்கு அடிக்கடி செல்போனில் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அப்போது மகேஸ்வரியின் உறவினர்களிடம் தம்பதியினருக்கு இனி இடையூறு கொடுக்கக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அதன்பின்னர், மகேஸ்வரி மற்றும் ஆடம் ஸ்மித் இருவரும் அதே கர்னூல் மாவட்டத்தில் வேறொரு பகுதியில் குடியிருந்து வந்தனர். அதன்பிறகும் ஆடம் ஸ்மித்துக்கு செல்போனில் மிரட்டல் வருவது தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வேளையில், ஆடம் ஸ்மித் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு நபர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, கணவரின் இறப்புக்கு தனது தந்தையும், மாமாவுமே காரணம் என போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து மகேஸ்வரியின் தந்தை மற்றும் மாமா இருவர் மீதும் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.