இந்தியா

சாமி சிலையைத் தொட்ட பட்டியலினச் சிறுவன் குடும்பத்துக்கு ரூ.60,000 அபராதம்

Sinekadhara

கர்நாடகாவில் சாமி சிலையை தொட்ட சிறுவன் குடும்பத்திற்கு ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் சென்றதால் தண்டனை, அபராதம் போன்ற கொடுமைகள் பட்டியலினத்தவருக்கு எதிராக அவ்வப்போது தொடர்ந்து வருகிறது. அதுபோன்றதொரு சம்பவம் கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் நடந்துள்ளது. மாலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஹுல்லேரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினச் சிறுவன் ஒருவன் சாமி சிலையை தொட்டதற்காக அவனுடைய குடும்பத்துக்கு ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. அதற்காக அங்குள்ள மக்கள் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் சேத்தன் என்ற சிறுவன் திருவிழா கொண்டாட்டங்களுக்கு 3 நாட்களுக்கு முன்பு சாமி சிலையை தொட்டதுடன், அதை எடுத்து தனது தலையில் வைக்கவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த உள்ளூர் மக்கள் சிறுவனை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் சிலையை தொட்ட குற்றத்திற்காக அவனுடைய தந்தை ரமேஷ் மற்றும் தாயர் ஷோபனா ஆகியோர் ஊர்சபை முன்பு வரவழைக்கப்பட்டு, பெரியோர்களால் அவர்களுக்கு ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதத்தொகையை செலுத்தும்வரை ஊருக்குள் வரக்கூடாது என்றும் அவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சிறுவனின் தாயாருக்கு ரவுடிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருவதாக கூறும் குடும்பத்தார், இதுவரை இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை.