இந்தியா

“இங்கிருந்தால் பசியால் இறந்து விடுவோம்” - டெல்லியை விட்டு வெளியேறும் கூலித்தொழிலாளர்கள்.!

webteam

நகரத்தை விட்டு வெளியேறாவிட்டால் பசியால் இறந்து விடுவோம் எனக் கூறி டெல்லியில் வேலைபார்த்து வந்த உத்தரப்பிரதேச கூலித்தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணம் மூலம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள அடித்தட்டு மக்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத் தேவையை நிவர்த்தி செய்வதற்காக சில மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 5000 ரூபாயை அளிக்க அந்த மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுமானப் பணியாளர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீடுகள் இல்லாமல் தவிப்போருக்காக முகாம்களை அதிகப்படுத்தவும் அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், டெல்லியில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் சில தினக்கூலி ஊழியர்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் உள்ள நிலையில் அவர்களுக்கு சில சலுகைகளையும் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் வேலைபார்த்து வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர். இதுகுறித்து பெண் ஒருவர் கூறும்போது, “எங்களுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. எங்களிடம் பணமும் இல்லை. நாங்கள் என்ன சாப்பிட வேண்டும்? இந்த நகரத்தை விட்டு வெளியேறாவிட்டால் பசியால் இறந்து விடுவோம்” எனத் தெரிவிக்கிறார்.