இந்தியா

நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி

kaleelrahman

கொரோனா நோய் பரவலின் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் இந்தியாவில் தினசரி நோய் தொற்று அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை கடந்தது.

இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என அரசாங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், கொரோனா நோய் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் மீண்டும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,50,000-ஐ கடந்து 1,52,879 ஆக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,05,926-ல் இருந்து 1,33,58,805-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 839 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,68,436-ல் இருந்து 1,69,275 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல இந்தியாவில் ஒரே நாளில் 90,584 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,90,859-ல் இருந்து 1,20,81,443 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,08,087 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 90.44 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.27 சதவீதமாகவும் உள்ளது.