இந்தியா

20 வருட சர்வீஸில் 40 முறை டிரான்ஸ்ஃபர்... - ரூபா ஐ.பி.எஸ் 'சமரசமற்ற' பயணம்!

webteam

ஐபிஎஸ் அதிகாரி ரூபாவை தமிழக மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விஐபி வசதிகள் வழங்கப்பட்டது என்றும், இதற்காக சிறை துறை அதிகாரிகளுக்கும், டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டது என்றும் பரபரப்பு புகார் கூறியவர்தான் ஐ.ஜி ரூபா. கர்நாடக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தவர். கர்நாடக சிறைத்துறையின் முதல் போலீஸ் பெண் அதிகாரி என்ற பெருமைக்கும் உரியவர்.

சசிகலா வழக்கில் பரபரப்பாக பேசப்பட்டவர். இப்போது மீண்டும் ஸ்பாட்லைட்டுக்குள் வந்துள்ளார். இந்த முறையும் ஓர் ஊழல் புகார் மூலமாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் கர்நாடகத்தின் முதல் பெண் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ரூபா. இதற்கிடையே, சமீபத்தில் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் நிம்பால்கர் உடன் திடீர் மோதலில் இறங்கினார்.

நிம்பல்கர் உள் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு பெங்களூரில் கூடுதல் ஆணையராக இருந்தார். நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.619 கோடி பெங்களூரு பாதுகாப்பான நகர திட்டத்தின் டெண்டர் பணியில் நிம்பால்கர் முறைகேடு செய்ததாக ரூபா குற்றம்சாட்டியதே இருவருக்கும் இடையேயான மோதலுக்கு காரணம். இந்தப் புகாரில் இருவரும் வார்த்தைப்போரில் ஈடுபட்டு கொண்டனர். ரூபா அதிகார வரம்பில்லாமல் டெண்டர் பணியில் தலையிடுவதாக நிம்பக்லர் குற்றம்சாட்டினார். இருவருக்கும் இடையான இந்த பகிரங்க மோதலுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் திடீரென ரூபா கர்நாடக மாநில கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

40-வது முறையாக டிரான்ஸ்ஃபர்!

இந்த இடமாற்றத்தை அடுத்து ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில், ``என்னுடைய பணிக்காலத்தின் ஆண்டுகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக நான் பணிமாற்றம் செய்யப்பட்டேன். தவறுகளை வெளிக்கொணருதல், உறுதியான நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கைகள் இருக்கலாம்; அது எனக்குத் தெரியும். ஆனால், நான் தொடர்ந்து எனது வேலையை சமரசமின்றி செய்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். ஆம், நேர்மையான அதிகாரிகளுக்கு நடக்கிற எல்லாமே, கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும் நடந்தது.

கர்நாடக சிறைத்துறையின் முதல் போலீஸ் பெண் அதிகாரி என்ற பெருமைகளுக்கு மத்தியில் ஐ.ஜி-யான ரூபா, பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பணியில் கண்டிப்புடன் இருப்பதால் இவர் பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளார். சந்தித்தும் வருகிறார்.

கர்நாடகாவின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள யாதவகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பணி நியமனம் செய்யப்பட்டார் ரூபா. தனது 20 வருட அரசு பணி சேவையில் பெரும்பாலான வருடங்கள் வட கர்நாடகத்தில் பணியாற்றியுள்ளார். அது அடிப்படை வசதிகள் குறைவான பகுதி. இதனால் அது அரசு ஊழியர்களுக்கு தண்டனை பகுதியாக பேசப்படுவதுண்டு.

இதற்கிடையேதான் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விஐபி வசதிகள் வழங்கப்பட்டதென்றும், இதற்காக சிறைத் துறை அதிகாரிகளுக்கும், டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக பரபரப்பு புகார் கூறியவர்தான், இந்த ஐ.ஜி, ரூபா! பிறகு, விசாரணை, அது இது என்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இதேபோல் கடந்த 2004-ம் ஆண்டு இப்போதைய மத்திய அமைச்சர் உமாபாரதி, சர்ச்சைக்குரிய உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் கொடி ஏற்ற முயற்சி செய்தார். ரூபா அவரை துணிச்சலாக கைது செய்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. கதக் மாவட்டத்தில் பணியாற்றியபோது, அங்கு ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ. யாவகல் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி பல துணிச்சல் காரியங்களை செய்தவர் ரூபா. பல எதிர்ப்புகளை பணிக்காலத்தில் சம்பாதித்தால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார் என்பது சமூக ஆர்வலர்களின் பார்வை. இப்படி 20 ஆண்டுகால பணிக்காலத்தில் 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருமுறை கோயம்புத்தூரில் நடந்த விழாவில் பேசிய ரூபா, "நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை. அவர்கள் வளைந்து கொடுக்காததால் பந்தாடப்படுகின்றனர். இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் நேர்மையான அதிகாரிகள் செயல்படுத்தும் பணிகள் தொடர்ச்சி இல்லாமல் அறுபட்டுவிடும் நிலை ஏற்படுகிறது" என்று கூறியிருந்தார்.

அவர் சொன்னது போலவே பந்தாடப்பட்டு இதோ இப்போது கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

- மலையரசு