டாடா குழுமத்தில் இனி எந்தப் பொறுப்பையும் ஏற்கும் ஆர்வம் இல்லை என அந்நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
கம்பெனிகள் நிர்வாகத்தில் சிறந்த தரத்தை நிலைநாட்டுவதே தனது நோக்கம் என்று கூறியுள்ள சைரஸ் மிஸ்திரி, தனி நபரையோ அல்லது தன்னையோ விட டாடா குழுமத்தின் நலனை முக்கியமாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்த்ரி, முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2016 ஆம் ஆண்டில் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து மிஸ்த்ரி தொடர்ந்த வழக்கை, தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர், தேசிய கம்பெனிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த தீர்ப்பாயம், டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமித்து உத்தரவிட்டது. மேலும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அறிவித்தது.
எனினும், டாடா நிறுவனம் மேல்முறையீடு செய்வதற்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்த தீர்ப்பாயம், அதுவரை மிஸ்த்ரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்க தடையும் விதித்தது. தேசிய கம்பெனிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் டாடா குழுமத்தின் ஓய்வுபெற்ற தலைவர் ரத்தன் டாடா வழக்கு தொடர்ந்துள்ளார்.
டாடா குழும நிறுவனமான டிசிஎஸ் தரப்பிலும் வழக்கு தொடர திட்டமிடப்பட்டது. இந்நிலையில், டாடா குழுமத்தில் இனி எந்தப் பதவியையும் ஏற்கும் ஆர்வம் இல்லை என்று சைரஸ் மிஸ்திரி திடீரென அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.