திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர் வெடித்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டத்தில் உள்ள பெவார் என்கிற இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருக்கிறது. இதனால் ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சிலிண்டர் வெடித்திருக்கிறது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். பலரும் என்ன நடந்தது என்றே அறியாமல் கதறியிருக்கின்றனர். பின்னர்தான் சிலிண்டர் வெடித்தது தெரியவந்திருக்கிறது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் மூன்றுபேர் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ஆவார். இதுதவிர 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை அஜ்மர் மாவட்ட ஆட்சியர் கவுரவ் கோயல் உறுதி செய்துள்ளார். மேலும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடமும் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களும் நொறுங்கியுள்ளன. இருப்பினும் எதனால் சிலிண்டர் வெடித்தது என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை.
மகிழ்ச்சியான திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்தது கிராம மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.