ஒடிசாவில் கனத்த மழையுடன் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது, ஃபோனி புயல். இதனால் மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.
ஃபோனி புயல் இன்று காலை 9.30 மணிக்கே கரையைக் கடக்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஒடிசாவின் கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 11 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மையங்கள், 880 புயல் பாதுகாப்பு அரங்கங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள், உடனடி உணவுகள், ரொட்டிகள், பிஸ்கட்டுகளை வானில் இருந்து விநியோகிக்க வீரர்களுடன் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன.
ஒடிசா கரையோர மாவட்டங்களில் காற்று வீசுகிறது, சாரல் மழை பெய்து வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணி, மின்சாரம், பால், குடிநீர், காவல் ஆகிய துறைகளைத் தவிர்த்து ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.
இன்று காலை பூரி நகரம் வழியாக கரையைக் கடக்கும் ஃபோனி புயல், கரையோரப் பகுதி வழியாக மேற்கு வங்கத்தையும் தாக்கும் எனத் தெரிகிறது. அதன் தாக்கம் வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் வடதமிழகத்தில் கூட இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது ஒடிசாவில் கடல் அலைகள் ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலையில் ஒடிஷாவின் புரி பகுதியில், கோபால்பூர்- சந்த்பாலி இடையே கனத்த மழையுடன் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மணிக்கு 170 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. காற்றுடன் கூடிய மழை அங்கு பெய்து வருகிறது.