இந்தியா

ஒடிஷாவை மிரட்டும் ஃபோனி : நாளை கரை கடக்கிறது !

webteam

ஒடிஷாவில் நாளை ஃபோனி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உயிர் சேதங்களை தவிர்க்க அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் தற்போது ஒடிஷாவை நோக்கி மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் நாளை மதியம் 3 மணியளவில் ஒடிஷா புனித நகரமான புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதைத் தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஒடிஷாவில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மீட்பு பணிகளை மேற்கொள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் விடுப்புகள் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக கடலோரத்தில் உள்ள 11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. இதனைதொடர்ந்து ஆந்திராவிலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அங்கும் உஷார் நிலை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக கடற்படை, விமானப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.