வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. 165 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. புயல் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டதால், கரையை முழுமையாக கடக்க அதிக நேரம் எடுத்துவருகிறது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு அர்னாப் புயல் என பெயரிடப்பட்ட நிலையில், இது பின்னர் அதிதீவிர புயலாக உருவெடுத்தது. அர்னாப்' புயல் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மற்றும் யானாம் (Yanam) பகுதிகளுக்கு இடையே கரை கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆந்திராவின் கடலோர பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
நேற்று இரவு புயலில் முதல் பகுதி கரையை கடக்கத்தொடங்கிய நிலையில், காற்றின் வேகம் கடுமையாக அதிகரித்தது. தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் புயலின் மையப் பகுதி கரையை கடக்கத் தொடங்கிய நிலையில், புயல் அதிகாலை 4 மணி அளவில் முழுவதுமாக கரையை கடந்து விடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அர்னாப் புயல் கரையை கடக்கும் போது நகராமல் ஒரே இடத்தில நிலைகொண்டது. இதனால் புயல் முழுவதுமாக கரையை கடக்க காலை 8 மணி வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த புயலின்போது காற்றின் வேகம் 135 கிலோமீட்டர் வரை இருந்ததால் காற்றில் ஏராளமான மரங்கள் சரிந்துவிழுந்துள்ளன. இதனால் ஆந்திராவின் பல்வேறு பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அதோடு ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் 2,000-க்கும் மேற்பட்ட புயல் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
சூறாவளிக் காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் முழுவதுமாக கரையை கடந்ததும் தனது வலுவை இழந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் உள்பகுதிகளிலும் கனமழையை கொடுத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.