இந்தியா

"அம்மா எனது சாக்லெட்களை திருடறாங்க; ஜெயிலில் போடுங்க" - குட்டிச்சிறுவனின் க்யூட் புகார்!!

Sinekadhara

தனது அம்மா சாக்லெட் சாப்பிட விடமாட்டேன் என்கிறார் என போலீசிடம் புகாரளிக்கும் சுட்டிக்குழந்தையின் க்யூட் வீடியோ இணையங்களில் பரவி பலரின் இதயங்களையும் கவர்ந்துவருகிறது.

மத்திய பிரதேசத்தின் புர்ஹான்புர் மாவட்டத்திலுள்ள தேத்தலை கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது தந்தையுடன் காவல்நிலையத்துக்குச் சென்ற 3 வயது சிறுவன், தனது தாயாரைப் பற்றி போலீஸ் கான்ஸ்டபிளிடம் புகார் அளிக்கிறார். அந்த வீடியோவில், ‘’அம்மா எனது சாக்லெட்களை திருடுகிறார். அவரை ஜெயிலில் போடுங்கள்’’ என்று மழலை மொழியில் அழகாக கூறுகிறார். தொடர்ந்து, தான் சாக்லெட் கேட்டால் தனது தாய் அடிப்பதாகவும் கூறுகிறார். அந்த போலீஸும் சிறுவன் சொல்வதை கவனமாக கேட்பதுபோல எழுதுகிறார். இதைகேட்கும் மற்ற காவலர்களும் சத்தமாக சிரிக்கின்றனர்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், ’’சிறுவனின் அம்மா அவனுக்கு குளித்துவிட்டு கண்களுக்கு மையிட்டார். அப்போது தனக்கு சால்கெட் வேண்டும் என அடம்பிடித்தான். அதனால் அவனுடைய தாயார் அவனை மெதுவாக ஒரு அடி அடித்தார். அப்போது அழ ஆரம்பித்த அவன், தன்னை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு அடம்பிடித்தான். அதனால் இங்கு அழைத்துவந்தேன்’’ என்கிறார்.

இதுகுறித்து துணை ஆய்வாளர் பிரியங்கா நாயக் கூறுகையில், சிறுவனின் புகாரைக் கேட்டு நாங்கள் அனைவரும் சிரித்துவிட்டோம். பின்னர் தனது தாயாருக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்று எடுத்துக்கூறினேன். அதன்பிறகுதான் அவன் வீட்டிற்குச் சென்றான் என்றுகூறியுள்ளார். இந்த குட்டிச் சிறுவனின் க்யூட் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.