உத்தரப்பிரதேசத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் தங்களது விடைத்தாளில் ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைப்பெற்று வருகிறது. ஃபெரோசாபாத் (Firozabad) பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு முடிந்தவுடன் அந்த விடைத்தாளை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்கும் போது அதற்குள் 50,100 மற்றும் 500 ரூபாய் தாள்கள் இருந்துள்ளது. தேர்வை சரியாக எழுதாத மாணவர்கள் விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்கள் ரூபாய் நோட்டுகளை விடைத்தாளில் வைத்து லஞ்சமாக அனுப்புகின்றனர். ஆனால் இதையெல்லாம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்கள் வழங்குவதில்லை. விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்குகிறோம். எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றனர்.
தேர்வு அறையில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேமராவுக்கு வரும் வயர்கள் பழுதாகியுள்ளதால் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறைக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவித்து எந்த பதிலும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.