மகாராஷ்டிராவில் அமராவதி நகரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு 4 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வதந்திகள் பரவாமல் தடுக்கும் நோக்கில் இணைய தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் ஏற்பட்ட வன்முறையை கண்டிக்கும் வகையில் அமராவதியில் இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தியதற்கு எதிராக உள்ளூர் பாஜக தொண்டர்கள் சார்பில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராஜ்கமல் சவுக் பகுதியில் கடைகள் மீது கற்கள் வீசப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது.
அடுத்தடுத்த அரங்கேறிய வன்முறையை அடுத்து அமராவதியில் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் பிறப்பித்தார். பொதுமக்கள் மருத்துவ தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் கூறியுள்ளனர். இதேபோல 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வன்முறை பரவாமல் இருக்க அமராவதியில் இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது.