கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்க காலையிலேயே தொண்டர்க ள் குவிய தொடங்கியுள்ளனர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக பிரமாண்டமான கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் உட்பட சுமார் 25 அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்கிறார்கள். முன்னதாக, இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கட்சித்தலைவர் களை மம்தா பானர்ஜி சந்தித்து நேற்று பேசினார். இம்மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்கிறார்.
இதற்கிடையே, பிரமாண்ட பிரமாண்ட மாநாட்டுக்காக, ஏராளமானோர் இன்று காலையிலேயே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கூடியுள்ளனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் அவர்கள் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.