செய்தியாளர் எழில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 10-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தொடங்குகிறது. 19-ஆம் தேதி வரை சொர்க்கவாசல் பிரவேசம் நடைபெறுகிறது.
அதற்கான இலவச டோக்கன்கள் நாளை காலை முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பைராகிபெட்டடி என்ற இடத்தில் சொர்க்கவாசல் திறப்புக்காக இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. அப்போது ஒரே நேரத்தில் ஒரே வரிசையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்த நிலையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். அதில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், மூச்சு திணறல் ஏற்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் திருப்பதியில் உள்ள ரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இறப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
நிகழ்வு இடத்தில் திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர், திருப்பதி எஸ்.பி.சுப்பராயலு, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியமளா ராவ் போன்றோர் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழப்புகள் உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.