இந்தியா

உ.பியில் பள்ளிக்குள் ஹாயாக படுத்திருந்த முதலை - தலைதெறிக்க ஓடிய மாணவர்களால் அதிர்ச்சி!

Sinekadhara

உத்தரபிரதேசத்தில் அரசுப்பள்ளி வளாகத்திற்குள் முதலையைக் கண்ட மாணவர்கள் பீதியடைந்து ஓடியதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

காசிம்பூர் கிராமத்திலுள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி திவாகர் வாஷிஷ்த் கூறுகையில், ’’காலை பள்ளிக்குச் சென்றதும் வளாகத்தின் உள்ளே முதலை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்களும், ஆசிரியர்களும் கூச்சலிட்டு, ஓடியுள்ளனர். உடனடியாக ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் அங்குவந்த கிராம மக்கள் முதலையை ஒரு ஓரமாக விரட்டி, வகுப்பறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். பின்னர் மாவட்ட அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்துசென்ற வனத்துறை அதிகாரிகள் முதலையை மீட்டு கங்கை ஆற்றுக்குள் விட்டனர்’’ என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், இந்த கிராமத்தில் ஓடைகள் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே முதலைகள் அடிக்கடி வந்துபோகிறது. மேலும், கங்கை ஆறும் பக்கத்திலேயே இருக்கிறது. முதலைகள் வருவது குறித்து கிராமத்தினர் பலமுறை உள்ளூர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.

தற்போது பள்ளி வளாகத்திற்குள் முதலை நுழைந்ததையடுத்து, கிராம பஞ்சாயத்தின் உதவியுடன் இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி கூறியுள்ளார். முதலைகள் கிராமத்தினர் கண்களில் தென்பட்டால், உடனடியாக வனத்துறையினர் அதனை பத்திரமாக பிடித்து ஆற்றுக்குள் விடுவர் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.